“What is this Indian language ?”

ezhil-release-screenshotதமிழில் மென்பொருள் பற்றிய விமரிசனங்கள்

சென்ற மூன்று மாதங்களாக எனது முழுநேர அலுவலக வேலையில், தமிழில் [தமிழ் இடைமுகத்தில் மட்டும்] Microsoft Outlook, Office செயலிகளை தினமும் வேலை நெருக்கடியில் பயன்படுத்தி ஒரு தமிழில் செயல்படும் ஒரு முழுநேர அனுபவத்தை நேர்கிறேன். இதே வேளையில் வீட்டில் திற மூல மென்பொருள் பங்களிப்பிற்கும், திட்டமிடுதல், கட்டுரை, குறிப்புகள் ஆகியவற்றிக்கும் Open Office பயன்படுத்தி வருகிறேன். இதற்க்கு சிறிதளவாவது காரணம் அழகாக தமிழில் பேசி படைத்த செல்லினம் செயலியை வெளியிட்ட, முரசு அஞ்சல், முத்து நெடுமாறனின் “கருவாக்கல், உருவாக்கல், விரிவாக்கல்” என்ற தமிழ் இணைய மாநாடு 2017-இன் போது கேட்ட பேச்சு – அவர் “நாம் தமிழில் இடைமுகங்களை செயல்படுத்தினால் நம்மளுடைய மொழி பற்றி மாதவர் கேட்பார்கள், நமது மொழிக்கும் விளம்பரம் கிடைக்குமே!” என்பது போல் பேசினார்.

இதே  போலே எனது சீன வேலை-நண்பர்  [இது முற்றிலும் ஒரு வேடிக்கையான “தெரிந்தவர் -ஆனால் நண்பர் அல்ல” என்பதற்கு அமெரிக்கர்கள் கூறும் நாசூக்கான சொல் என அறிவேன்] “என்ன இந்தியன் மொழி இது?” என்றும் கேட்க – [பாவம் அவருக்கு ஆரியம்-திராவிடம் போன்ற மொழிகள், 1500 கூடுதலான மொழிகள் பற்றியெல்லாம் பேசி பாடம் நடத்தாமல்] தமிழ் என்று சொல்லி “இந்தியாவில் இல்லை, சிங்கப்பூரில் சீன மொழிக்கு நிராக இருக்கு” என்றும் சொல்லி, அவரது பெயரை தமிழில் எழுதி அனுப்பினேன். தமிழ் இடைமுகம் பயன்படுத்தினால் அதற்கும் ஒரு மதிப்பு, தனித்துவம்!

இந்த பதிவில் எனது Microsoft Office, Open-Office பற்றிய அனுபவங்கள் குறித்து எழுதுகிறேன்.

அழகிய மென்பொருள், beautifully crafted software, ஒரு திரைப்பட காதல் கட்சியில் எப்படி காதலன்-காதலி சேர்கின்ற நொடியில்  (படம் பார்ப்பவரின் பார்வையில் இயக்குநர் மறைந்து இருப்பதுபோல்), வேலைக்கும் வேலைசெய்யும்ப-யனர் இடையே ஊடுறுவாமல் பின்புலத்தில் இருக்கவேண்டும். இதனை சரியே செய்யும் இடைமுகம் நல்ல மென்பொருள்; இத்தகைய தமிழாக்கம் கொண்ட இடைமுகம் இவ்வாறே ஊடுறுவாமல் இருக்கவேண்டும்.

உண்மையில் Microsoft நிறுவனத்தின் தமிழாக்கம், (l10n – [localization-இக்கு இட்ட சுருக்கம்]), மிக எளிமையாக உள்ளது. இதனை கையாண்ட குழு நல்ல வேலை செய்தார்கள். சில default-கள் அபத்தமாக இருந்தாலும் பெரும்பாலும் ஓரளவு தமிழ், தமிழ் கணிமை கலைச்சொற்கள், எதார்த்தமாக தமிழில் புழங்கும் ஒரு சாமானியன்/யர், இதில் எளிதாக இயங்கும் வகையில் அமைந்தது!

முதலில் Open Office இடைமுகத்தை தமிழில் தந்த ழ-கணினி-குழுவிற்கு நன்றி. Open Office இடைமுகம், உண்மையில் ழ-கணினி திட்டத்தில் வழி தன்னார்வலர்களால் வெளியிடப்பட்ட மொழியாக்கம் – மிக பாராட்டத்தக்கது ஆயினும், Microsoft நிறுவனத்தின் மென்பொருளுக்கு இணையாக இல்லை. நிறைய பிழைகள் – “text fields” என்பதை வயல்கள் என்றும் ஓரிடத்தில் தவறாக மொழி பெயர்க்கப்பட்டது. இவ்வாறு சில வேறுபாடுகளும், தரம் சார்ந்த வகையில் முன்னேற்றங்கள் தேவைப்படுகின்றன. நான் ஒன்றை மட்டுமே இங்கு குறிப்பிட்டாலும், நீண்ட நாள் திற மூல பயனாளர் என்பதனாலும் இதில் கருத்து வேறுபாடுகள் கிடையாது.

இதே நேரத்தில் மற்றோரு மென்பொருளையும் இவற்றோடு ஒப்பிடவேண்டும்; தமிழில் சிறந்து விளங்கும் “மென்தமிழ்” ஆவண திருத்தி (Word processor) முழுமையும் தமிழ் மொழியியல் கொண்டு, சிறப்பாக பேரா. திரு. தெய்வசுந்தரம்நயினார், அவர்களது தலைமையில் வெளியிடப்பட்டு வருகிறது. இதற்கும் அவரது பல தமிழ் கணினி மொழியியல் பங்களிப்பிற்கும் அவருக்கு 2015-ஆம் ஆண்டு தமிழக அரசு கணினி விருது அளித்து சிறப்பிக்க பட்டார். இந்த மென்தமிழ் திருத்தியை சில நேரம் மட்டுமே பயன்படுத்தியதால் நான் இதற்கு தற்போது ஒப்பீடுகள் கொடுக்க முடியவில்லை.

கோரிக்கை

தமிழில் இடைமுகங்களை கிடைக்கும் இடங்களில் பயன்படுத்துங்கள்; இவற்றை பற்றி வெகுஜன இதழ்களிலும், வலை பதிவுகளிலும் இடுங்கள்; நண்பர்களுக்கும், குடும்பங்களுக்கும் சொல்லுங்கள். தமிழ் மொழியில் கணினியியல், கணினி இடைமுகவியல் (interface design) போன்ற துறைகளின் வளர்ச்சி விமர்சன பார்வைகள், பின்னூட்டங்கள், இல்லாவிடில் தேய்ந்து போய்விடும்; மறக்கப்படும். காற்றோடு தூசியாகிவிடும். இது மென்பொருள் வடிவமைப்பாளருக்கு நீங்கள் அளிக்கும் பரிசு.

நன்றி, முத்து (01/27/18: சான் ஓசே, கலிஃபோர்னியா)

அடிக்குறிப்பு : சில சொற்பிழைகளை திருத்தியுள்ளேன்